பிள்ளைப்பராய விருத்திக்கு தூண்டுதல் மிக முக்கியமானது

 

முன்னைய காலங்களில் நம்பப்பட்டது போலல்லாது குழந்தையின் முதல் மூன்று வருடங்கள் அவர்களது நீண்ட கால விருத்தியில் மிக முக்கியமான காலம் என புதிய விஞ்ஞான ஆய்வுச் சான்றுகள் எடுத்தியம்புகின்றன. பெற்றோர்கள் தங்களது குழந்தையுடன் சேர்ந்து கொள்ளல் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் அனுபவங்கள் குழந்தையின் மனவெழுச்சி விருத்தி திறன் கற்கை மற்றும் அவர்கள் பிற்கால வாழ்க்கையில் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பவற்றில் பாரிய நல்விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

 

குழந்தையை தொடுதல், தூக்கி வைத்திருத்தல், தாலாட்டுதல், கதைத்தல், பாடுதல், நடனமாடுதல் மற்றும் குழந்தையுடன் விளையாடுதல் போன்ற பெற்றோர்களின் செயற்பாடுகள் குழந்தையின் மூளை விருத்தியில் தத்ரூபமான நேர் தாக்கத்தை ஏற்படுத்துகின்து.

 

இன்றைய பெற்றோரகள் அவர்களது குழந்தை பிறக்க முன்னரே குழந்தையின் மூளை விருத்தி சம்பந்தமாக யோசிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர். பிறப்பிற்கு முன்னர் குழந்தையின் மூளைக்கலங்கள் வியத்தகு வீதத்தில் பெருகின்றது. எனவே குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போது மூளை விருத்தியானது ஊக்குவிக்கப்பட வேண்டும். போசனைக் குறைபாடு, போதைப் பொருள் பாவனை, புகைத்தல், மது போன்றன கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் மூளை விருத்தியை பாதிக்கக் கூடிய சில காரணிகளாகும்.

 

குழந்தை பிறந்தவுடன் அதனது மூளையானது நிறைவு பெறாத நிலையிலுள்ளது. பிறப்பின் பின்னர் மூளை விருத்தியில் தாக்கம் செலுத்துவது பரம்பரை இயல்பு மாத்திரமல்ல மாறாக குழந்தையின் சூழலும் மிகப் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது. பிறப்பின் போது குழந்தையின் மூளை நூறு மில்லியன் மூளைக் கலங்களைக் கொண்டிருப்பதுடன் அவை செயற்படும் வலையமைப்பாக இணைக்கப்பட வேண்டியுள்ளது.

 

குழந்தை மூன்று வயதாயிருக்கும் போது அவர்களின் மூளையானது அதன் கலங்களிடையே ஆயிரம் ரில்லியன் இணைப்புக்களை உருவாக்கியிருக்கும். குழந்தை வளர்ச்சியடையும் போது மூளைக்கலங்களிடையேயான இவ்விணைப்புக்களில் சில நிரந்தரமாவதுடன் மற்றையவை இல்லாமற் போகின்றது. எனவே மூளையானது எவ்விணைப்புக்களை நிரந்தரமாக்குவது என தீர்மானிக்குமிடத்தில் தான் குழந்தையின் சூழலானது மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. குழந்தையின் முன்பராயத்தில் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் மூளை இணைப்புக்கள் மூளையின் ஒழுங்கமைப்பிற்கு அடித்தளமாவதுடன், பிள்ளையின் வாழ்க்கை பூராகவும் செயற்படுகிறது.

 

மாறாக குழந்தையின் முன்பராயத்தில் பாவிக்கப்படாத மூளை இணைப்புக்கள் குறைவான அளவே விருத்தியடைகின்றது. எனவே குழந்தையை சூழவுள்ள சூழலானது குழந்தையின் மூளை விருத்தி மற்றும் மூளைத் தொழிற்பாடு என்பவற்றில் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது.

குழந்தைகள் தங்களுக்குள் மறைந்துள்ள திறனை வெளிக்கொணர்வதற்கு அவர்களிற்கு தேவையானது என்னவெனில்,

 

 குழந்தை பாதுகாப்பாய் உணர வேண்டும்.

 எல்லாக் குழந்தைகளும் தாங்கள் விஷேடமானவர்கள் என தெரிய வேண்டும்.

 குழந்தை தனது சூழலிருந்து தான் என்ன எதிர் பார்க்கலாம் எனும் நம்பிக்கையை பெறல்.

 குழந்தை ஒழுக்கத்தை பெறல்.

 குழந்தை சுதந்திரத்தையும் வரையறையையும் கொண்ட சமமான அனுபவத்தை பெறல்.

 குழந்தை புத்தகங்கள், இசை மற்றும் பொருத்தமான விளையாட்டு உபகரணங்களுடனான பல்வகைப்படுத்தப்பட்ட சூழலிற்கு வெளிப்படுத்தப்படல்.

 

சுகாதாரமான, அன்பான, பாதுகாப்பான, மனவெழுச்சியை சமமாகக் கொண்ட வீட்டுச் சூழலை பெற்றோர் வழங்குவதன் மூலம் மேற்கூறியவற்றை அடைய முடியும்.

 

எதிர்வு கூறக்கூடிய சூழலில் கவனமாக அக்கறையுடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் குறைவான கவனிப்பு மற்றும் குறைந்த பாதுகாப்பான சூழலில் வளரும் குழந்தைகளைப் பார்க்கிலும் சிறப்பாக கற்பவர்களாக வருகிறார்கள்.

 

குழந்தை பராமரிப்பு நிலையங்களினை நாடவேண்டிய சூழ்நிலையிலுள்ள குழந்தைகளிற்கு பெற்றோர் சீரான தூண்டுதலை வழங்கக் கூடிய சிறிய பிள்ளைஃபாதுகாவலர் வீதத்தினை கொண்ட பராமரிப்பு நிலையத்தினை தெரிவு செய்ய வேண்டும். வீட்டிற்கு வெளியே பராமரிப்பு நிலையத்தில் குழந்தையை பராமரிப்பவரால் குழந்தையின் மூளை விருத்தியை உண்டாக்கக் கூடிய அனுபவங்களை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்கவும்.

 

மூளை விருத்தியானது வாழ்நாள் பூராகவும் தொடர்வதென்பது எமக்கு ஒரு நல்ல செய்தி. குழந்தையின் விருத்தியையும் நல் வாழ்க்கையையும் நேரிடையான (pழளவைiஎந) தாக்கம் செலுத்துவதற்கு தொடர்ச்சியான வாய்ப்புக்கள் இருக்கின்றது. இது அனைத்து சிறியவர்கள், மாற்றுத் திறனாளிகள் விஷேட தேவையுடையோருக்கும், மற்றும் தத்தெடுக்கப்படுபவர்களிற்கும் பொருத்தமானது.

 

பின்வரும் சுகாதார காரணிகள் குழந்தைகளின் மூளைவிருத்திக்கு அவசியமாக அமைகின்றது.

 

1) போசாக்கு - தாய்ப்பால் மிகவும் அவசியமான போசனையை வழங்குவதுடன் ஆக்கபூர்வமான குழந்தை – தாய் இணைப்பை ஏற்படுத்துகிறது. முறையான சம உணவு பிள்ளையின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் பிள்ளைப்பருவம் முழுவதும் செல்வாக்கு செலுத்துகிறது.

 

2) அபிவிருத்தி செயற்பாடுகள்:- நேரான முகத்திற்கு எதிர் முகத்துடனான தகவல் பரிமாற்றம் குழந்தையினது மொழிவிருத்தியை ஊக்கப்படுத்துகிறது.

 

3) விருத்தியிலுள்ள தடை, குறைகளை முற்கூட்டியே அடையாளம் காணல்:    இச் செயற்பாடு முன்கூட்டிய கவனமெடுத்தலிற்கும் குழந்தையை உரிய சிகிச்சையளிப்பவரின்  ஆலோசனையைப் பெறுவதற்கும் விருத்தியிலுள்ள குறைகளிற்கு சிகிச்சையளிப்பதற்கும் உதவும்.

 

4) நேரிடையான சூழல் (pழளவைiஎந நnஎசைழnஅநவெ): நேரிடையான மற்றும் அன்பான சூழலில் குழந்தையை வளர்த்தல் அவர்களின் விருத்தியில் மிகப் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தும்.

 

மூளை விருத்தியானது முடிவில்லாதது. பிள்ளைப் பராயமானது முக்கியமானதாக இருந்த போதிலும், மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிற்கு இன்னும் கவனமெடுக்க வேண்டிய தேவையுள்ளதுடன், அவர்கள் குழந்தையின் மூளை விருத்திக்கான சந்தர்ப்பத்தினை தவறவிட்டோமென வருத்தப்பட வேண்டியதில்லை. குழந்தையின் நல்வாழ்க்கையினை எதிர்வரும் வருடங்களில் நேரிடையாக மாற்றுவதற்கான வாய்ப்பு அவர்களிற்கிருக்கின்றது.

 

இன்றைய பெற்றோர் அவர்களது குழந்தையின் முதல் மூன்று வருட வாழ்க்கை மூளை விருத்திக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர வேண்டும். பெற்றோர் குழந்தையின் சூழல், போசனை இவ்வயதில் பெறும் தூண்டுதல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

குழந்தை முன்பள்ளியிலிருந்து வளர்ந்தவராகும் வரை மட்டுமல்லாது முதியவரானதும் வெளிக்காட்டும் செயற்பாடுகளில் பெரும் பகுதி அவர்களது சிறுபராய அனுபவத்தில் தங்கியுள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

 

Begley, S. ―How to Build a Baby’s Brain.‖ Newsweek. Special Edition 1997, 28-32. Families and Work Institute. 1996. Rethinking the Brain:

Healy, Ph.D., Jane M. You’re Child’s Growing Mind, Doubleday, New York, NY, 1987, 1984.

Jensen, Eric. Teaching with the Brain in Mind. ASCD, Alexandria, VA, 1998.

Nash, M. ―Fertile Minds.‖ Time, February 1997, 48-56.

Ramey, Craig T. and Sharon L. Right From Birth. Goddard Press, NY, 1999.

Schiller, P. ―Turning Knowledge Into Practice,‖ March/April 1999 issue, Child Care Information Exchange.

Schiller, P. ―The Thinking Brain,‖ May, 1998 issue, Child Care Information Exchange.

 

Web Pages - http://www.iamyourchild.org, http://www.zerotothree.org, http://www.naeyc.org, http://www.nccic.org.

 

Prepared by.

V Manoharan B.Sc., CEMBA.

Kindergarten Practician.

(c) 2013, FutureMinds Kindergarten and Child Care. Designed by Gravitide